அமெரிக்காவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு நம் மண்ணின் ஆரோக்கிய உணவுகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என ஆத்தூரைச் சேர்ந்த கிருபாகரன் துவங்கியிருக்கும் ஸ்டார்ட்அப் தான் “டிவைன் புட்ஸ்”. அதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் முதலீடு செய்து கணிசமான பங்குகளை வாங்கியுள்ளனர்.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கிருபாகரன் 2008ல் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, 2015ல் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸில் எம்.பி.ஏ., முடித்தார். பிறகு அமெரிக்காவிலேயே பிரபல வங்கியில் பிசினஸ் அனலிஸ்ட் பணி. ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். திருமணம் முடிந்தது. வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாக எண்ணினார். ஒருநாள் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த சமயத்தில் பாஸ்டனில் தனது அமெரிக்க நண்பர்களுடன் உணவு விடுதி ஒன்றில் இருந்துள்ளார். அதில் ஒருவர் மஞ்சள் பால் பருகிக் கொண்டிருந்துள்ளார். அதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த கிருபாவிடம், அதன் பலன்களை பயபக்தியுடன் கூறியுள்ளார் அந்த அமெரிக்கர்.
அட இதெல்லாம் எங்கள் ஊர் பாட்டிகளுக்கே தெரியுமே என்று வியந்தவர், அமெரிக்க சூப்பர் மார்கெட்டுகள், இ-காமர்ஸ் தளங்களில் என்னென்ன பாரம்பரிய ஆரோக்கிய உணவுகள் இருக்கின்றன என பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். சீனாவின் உணவு வகைகள், ஜப்பான் பாரம்பரிய உணவு வகைகள், மெக்சிகோவின் உணவு வகைகள் இருந்துள்ளன. நம்மூர் பொருட்கள் ஏதேனும் தட்டுப்படுகிறதா என பார்த்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. உடனே அவரது அமெரிக்கக் கனவை முடித்துக் கொண்டு நம்மூரின் பாரம்பரிய ஆரோக்கிய உணவு வகைகளை பேன்சியாக்கி மார்க்கெட்டிங் செய்து உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பிசினஸ் கனவு துவங்கிற்று. அதனை நனவாக்க டிவைன் புட்ஸ் என்ற ஸ்டார்ட்அப் துவங்கினார்.
அதில் பருத்திப் பால் மிக்ஸ், சிறுதானிய மிக்ஸ், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொம்புத் தேன், தூத்துக்குடியிலிருந்து நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, கோல்டன் மிக்ஸ் என்ற பெயரில் மஞ்சள் பாலுக்கான மிக்ஸ், குல்கந்து, முருங்கை பவுடர், தேங்காய் சர்க்கரை, தேங்காய் எண்ணெய் சோப்பு போன்ற பல தயாரிப்புகளை விற்க ஆரம்பித்தனர். விலை அதிகம் இருந்தாலும் அதற்கென ஒரு வாடிக்கையாளர் வட்டம் உருவானது. அப்படி தான் பருத்திப் பால் மிக்ஸ் விக்னேஷ் சிவனை அடைந்திருக்கிறது. அது குறித்து நல்ல ஒரு கருத்தை கிருபாகரனுடன் பகிர்ந்துள்ளார். நீங்களும் பங்குதாரர் ஆகலாம் என கிருபாகரன் சொல்ல, அவரது தொழில் தொடர்பாக ஆராய்ச்சியில் இறங்கினார். தயாரிக்கும் இடங்கள், மூலப்பொருட்களை வழங்கும் விவசாயிகள் என அனைவருடன் கலந்துரையாடி, நயன்தாராவுடன் இணைந்து கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஸ்டார்ட்அப் டிஎன் ( StartupTN) TANSEED 4.0 மானியத்தைப் இவரது நிறுவனம் பெற்றுள்ளது. நவீன வாழ்க்கையை பாரம்பரிய ஆரோக்கியத்துடன் இணைப்பவை தான் தங்களது தயாரிப்புகள் என கூறுகிறார் கிருபாகரன்.