விவசாயிகள் தற்போது நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயத்தைத் தவிர்த்து தற்போது மாற்று விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இதற்குப் பலரும் தேர்ந்தெடுப்பது விவசாய நிலங்களில் தேக்கு, செம்மரம், சந்தன மரம்,ரோஸ்வுட், உள்ளிட்ட மரப்பயிர்கள் வளர்ப்பது. இவைகளை அனைவரும் வளர்க்கலாமா? என்று யோசித்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மகோகனி வளர்ப்பு விவசாயிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. 10ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர லாபத்தைக் கொடுக்கும் அளவிற்கு டிம்பர் துறையில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.
மகோகனி ஒரு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இனமாகும். மிகவும் வேகமாகக் கிளைகளின்றி நேராக வளரும். சுமார் 50அடி வரை வளரும். குறிப்பாக 12மாதங்களில் 10 அடி வரை வளரக்கூடியது.இந்த மரங்களை ஏக்கர் பரப்பளவிலும், வரப்போரங்களிலும் வளர்க்கலாம். இந்த மரங்களை எட்டு வருடங்களிலிருந்து வெட்டலாம். எட்டு வருடங்களில் பிளைவுட்டிற்கும், 10 வருடங்களில் டிம்பருக்கும் கொடுக்கலாம். ஒரு மரம் ரூ.13ஆயிரம் வரை விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.உறுதித்தன்மை வாய்ந்த இந்த மரங்களிலிருந்து ஜன்னல், பர்னிச்சர்கள், கப்பல் கட்டுவதற்கு, இசைக் கருவிகள் உள்ளிட்டவைகளில் அதிகளவில் பயன்பட்டு வருவதால், இதன் தேவை அதிகரித்துள்ளது.
அதிக நிழல் விழாத மரங்களாக இருப்பதால், நிலங்களில் மண் வளம், நீர்வளம் பாதுகாக்கும். இதை வளர்க்க எந்தவித அனுமதியும் வாங்கத் தேவையில்லாததால், விவசாயிகள் அதிகம் விரும்பி வளர்த்து வருகின்றனர்.தொடர் வருமானத்தைப் பெற நினைக்கும் விவசாயிகள் வரப்போரங்களில் இந்த மரத்தை நட்டு வளர்த்து லாபம் பெறலாம். குறிப்பாக மரப்பயிர்களை வளர்க்க அதிக செலவு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஏக்கருக்கு சுமார் 500 மரக்கன்றுகள் வரை நடவு செய்யலாம்.விவசாயிகளின் மாற்று வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், மரப்பயிர் விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் தரமான மகோகனி மரக்கன்றுகளைக் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதைத் தவிரத் தனியார் நர்சரிகளிலும் இந்த மரக்கன்றுகள் கிடைக்கின்றன.விவசாயத்தில் லாபம் இல்லை என நினைக்கும் விவசாயிகள் பலர் மரப்பயிர் விவசாயத்தில் சாதித்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.