மாணவர்களே! கல்வியில் கவனம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இக்கால மாணவர்களில் ஒரு பகுதியினர் எப்போதும் மொபைல், டிவிகளில், தேவையற்ற நிகழ்வுகளைப் பார்த்து, பொழுதை அநாவசியமாகப் போக்குகின்றனர். சிலர் கல்வி தெய்வமான சரஸ்வதியை வணங்குவார்கள். விநாயகருக்கு சிதறுகாய் போடுவார்கள். ஆனால், படிப்பில் கோட்டை விட்டு விடுவார்கள். நம் கடமையைச் செய்யாமல், தெய்வத்திடம் பலனைக் கேட்பது தவறு என்பதை இவர்கள் உணருவதில்லை. உ இவர்களுக்கு ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் பாடமாக இருக்கும். ஒரு மாணவன் படிப்பில் கவனம் செலுத்தாமல் எப்போதும் டிவி முன்பே அமர்ந்திருந்தான். பெற்றோர் இதுபற்றி ஆசிரியர்களிடம் புகார் செய்தனர். பள்ளியின் நல்லொழுக்க ஆசிரியர் அவனுடன் உரையாடினார். இதோ அந்த உரையாடல்: “தம்பி! ஜெப்ரே ஆர்ச்சர் என்பது யார் தெரியுமா?” “தெரியாது” “பரவாயில்லை...நானே சொல்கிறேன். அவர் ஒரு நாவலாசிரியர். அவர் வளர்த்த பூனை வீட்டிலுள்ள டிவி மேல் தான் எப்போதும் உட்கார்ந்திருக்குமாம்.” “ஏன்?” “அதற்கு மூன்று காரணம் சொன்னார் ஆர்ச்சர். முதலாவது, பூனையை யாரும் தவறுதலாகக் கூட மிதித்து விட மாட்டார்கள். இரண்டாவது, டிவி பெட்டியின் சூடு அதற்கு இதமாக இருந்தது. மிக முக்கியமானது என்ன தெரியுமா? “என்ன...”மாணவன் ஆர்வமானான். “நீ பார்க்கும் கண்ட கண்ட நிகழ்ச்சிகளெல்லாம் அதன் கண்ணில் படாது,”. இதன்பிறகும் மாணவன் டிவி பக்கம் போயிருப்பானா என்ன!