நதி வலம் வருவோமா! | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
நதி வலம் வருவோமா! தமிழகத்தில் கிரிவலம் பிரபலம் போல், மத்திய பிரதேசத்தில் நதிவலம் பிரபலம். ஓணம் கதாநாயகன், மகாபலி மன்னன் யாகம் செய்தது நர்மதை நதிக்கரையில் தான். காலணி அணியாமல் இந்த நதியை 1300 கி.மீ., துõரத்துக்கு வலம் வருவர். நர்மதை வலத்தை முதலில் துவங்கியவர் என்றும் பதினாறு வயதுள்ள மார்க்கண்டேயர். அழியா வரம் பெற்ற சிரஞ்சீவிகளான பரசுராமர், ஆஞ்சநேயர், அஸ்வத்தாமன், விபீஷணன், மகாபலி, கிருபாச்சாரியார், வியாசர் ஆகியோர் இந்த நதியை வலம் வருபவர்களை பாதுகாப்பதாக ஐதீகம். இதைச் சுற்றி வர 3 வருடம், 3 மாதம், 12 நாட்கள் ஆகும். துறவிகளும், நர்மதை நதிக்கரையிலுள்ள கிராம மக்களும் நதிவலத்தில் ஏராளமாக பங்கேற்பர். நதிவலம் செல்ல முடியாதவர்கள், அதிகாலையில் எழுந்து, இந்த நதியை மனதில் நினைத்து, நர்மதா என மூன்று தடவை உச்சரித்தால், விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது ஐதீகம். இந்த நதி மாசி மாதம் வளர்பிறை சப்தமி திதியன்று பிறந்தது. இந்நாளில் நர்மதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.