முன்னோருக்கு நன்றி சொல்வோம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இன்று ஆனி மாத அமாவாசை. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்கிறார் திருவள்ளுவர். அவர் இந்தக்குறளை எழுதியது அமாவாசையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்த தான். அமாவாசையன்றே முன்னோர் வழிபாடு செய்கிறோம். வழிபாடுகளில் உயர்ந்தது இது தான். அவர்கள் இல்லாமல் நாம் பூமிக்கு வரவில்லை. அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்து கொடுத்த சொத்துக்களை நாம் அனுபவிக்கிறோம். தங்கள் பசியைத் தாங்கிக் கொண்டு, நமக்கு உணவூட்டியவர்கள் அவர்கள். இதற்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். இதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று உறவுக்கு பிறகு தெய்வத்தைக் கொண்டு வந்தனர். மறைந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளில் 41 தலைமுறையினரை, அவர்களின் பெயர் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அவர்களை நினைத்து, அமாவாசை நாளில் வணங்க வேண்டும். மறைந்த ஆசிரியர்கள், நண்பர்களையும் நினைக்க வேண்டும். தர்ப்பணம் செய்ய தகுதியுள்ளவர்கள், தீர்த்தக்கரைகளுக்கு சென்று இவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். சிறிது எள்ளும், தண்ணீரும் விட்டாலே போதும். அவர்கள் பசி தீர்ந்து நமக்கு ஆசியருள்வர். அமாவாசையன்று மதியம் அவர்களுக்கு பிடித்த உணவு வகையை திருவிளக்கின் முன் படைத்து வணங்குவது இன்னும் சிறப்பு.