சுடாத சூரியன் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சுடாத சூரியன் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பதால், அவரது முகம் மேற்கு நோக்கி இருப்பது இயற்கை. இதை மனதில் கொண்டு கும்பகோணம் அருகில் சூரியனார்கோயில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சிவசூரியன் தனது துணைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் அருள்பாலிக்கிறார். இவரைத் தவிர ஏழு நவக்கிரகங்களுக்கு அவரவர்களுக்குரிய திசையில் சன்னதிகள் உள்ளன. எவ்வளவோ துõரத்திலுள்ள பூமியில் இருக்கும் நம்மைக் கூட, சூரியனின் வெப்பம் சுட்டுத்தள்ளுகிறது. சில சமயம் வெப்பம் அதிகமாகி, காடுகளில் தீயே பிடிக்கிறது. இதனால், சூரியனார் கோவிலில் இருக்கும் சூரியனின் எதிரே, அவரது வாகனமான குதிரைக்கு முன்னால், குருவை பிரதிஷ்டை செய்து விட்டனர். அவர் மட்டும் சூரியனை பார்த்தபடி எதிரில் நிற்கிறார். குருவை, சீடனான சூரியனால் சுட முடியாது அல்லவா! எனவே, தன் வெப்பத்தை அவர் மீது காட்ட மாட்டார். இங்கே ஆடி கடைசி செவ்வாய் அன்று சிறப்பு பூஜை நடக்கும். தைப்பொங்கல், மாசி சிவராத்திரி நாட்களும், ஞாயிற்றுக்கிழமைகளும் இங்கு விசேஷம்.