ஈசன் மீது மட்டும் வீசும் சூரியஒளி - திருவாலீஸ்வரர் கோயிலின் அதிசயம் | Chengalpat | Shivatemple | Raj
ஈசன் மீது மட்டும் வீசும் சூரியஒளி - திருவாலீஸ்வரர் கோயிலின் அதிசயம் | Chengalpat | Shivatemple | Rajarajacholan | SouthIndian Temple செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் நெரும்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, கிபி 994ல் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருவாலீஸ்வரர் கோயில் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன் ராஜநாராயண சம்புவராயனின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கான வரி கடுமையாக உயர்த்தப்பட்டன. வரி கட்டாதவர்களை தீ வைத்து கொளுத்தினான் அரசன். அதனால் இந்த ஊருக்கு நெருப்பூர் என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் மருவி, நெரும்பூர் என்றானது. அரசனின் கொடுமைக்கு பயந்து ஊரைவிட்டு ஓடிய வணிகர்கள், நெசவாளர்களை சம்புவராயன் மீண்டும் அழைத்து வந்து, வரிகளை குறைத்து குடியமர்த்திய விவரம் திருவாலீஸ்வர் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர் திருவாலீஸ்வரர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் காட்சி தருகிறார். கமல வடிவத்தின் மீது திருவாலீஸ்வரர் காட்சி தருவதால், சிவனையும் பெருமாளையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்கின்றனர். தட்சிணாயனத்தில் ஒரு நாளில் சூரியஒளி இறைவனின் திருமேனி மீது படும்படியாக கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பகிரகத்தின் மேற்பகுதி புதர் மண்டி இருப்பதால், இந்த அதிசய நிகழ்வை எவராலும் இப்போது பார்க்க முடியவில்லை. ஈசனின் பின்புறம் மகாவிஷ்ணு, சதுர்முக பிரம்மா, துர்க்கை அருள் பாலிக்கின்றனர். செவ்வாய்களில் துர்க்கை வழிபாடு, வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் வழிபட்டால், திருமண தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோயிலில், சிவனை , ராகு வழிபட்டதாக ஐதீகம். நாகராஜ சுவாமிக்கு தோஷம் ஏற்பட்டபோது, உத்திராயண கால சூரிய உதயத்தின் போது திருவாலீஸ்வரரை வலம் வந்து, சூரியன், சந்திரன் ஆகியோரை வழிபட்டு, தோஷம் நீங்கியதாக இக்கோயிலுக்கு வரலாறு உண்டு. திரிபுரசுந்தரி அம்பாள் ஈசனுக்கு துணையாக நிற்கிறாள். கோஷ்டத்தில் விநாயகர், முருகனை தரிசனம் செய்யலாம். ஒருகாலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு சென்ற கோயிலாக இருந்தது. இன்று பாழடைந்து கிடந்தாலும், அதன் பிரம்மாண்டம் மெய்மறக்க செய்கிறது. இந்த கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதால், விரைவில் புனரமைக்க அறநிலையத்துறையிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.