அரிச்சந்திரனும் பொய் சொன்னான் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
முனிவர் விஸ்வாமித்திரர் சரியான முசுடு. அரிச்சந்திரனை பொய் சொல்ல வைப்பதாக சபதம் எடுத்தவர். அவரும் என்னவெல்லாமோ செய்து பார்த்தார். முடியவே இல்லை. தன் சீடனான நட்சத்திரேசன் என்பவனை அழைத்து,“அடேய், அரிச்சந்திரனை மறைமுகமாக கவனி. அவன் பொய் சொல்கிறானா என்று பார். பொய் சொல்ல முயற்சித்தால் கூட போதும். என்னிடம் சொல்லி விடு,” என்றார். நட்சத்திரேசன் அவரிடம்,“சுவாமி! அவன் தான் ஏற்கனவே, உங்களிடமே பொய் சொன்னானே! இதை நீங்கள் கவனிக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றான். விஸ்வாமித்திரருக்கு ஆனந்தமும், ஆர்வமும் பொங்கியது. “அடேய்! என் வயிற்றில் பாலை வார்த்தாய். என் சபதத்தில் நான் ஜெயிக்கப் போகிறேன். சொல, சொல்...அவன் என்ன சொன்னான்?” என்று சீடனை அவசரப்படுத்தினார். “நீங்கள் அவனது அரண்மனைக்கு சென்ற போது, தங்களைப் போன்ற பரமசாது, அவனது அரண்மனைக்கு எழுந்தருள கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றானே! இது போதாதா?” என சொல்லி விட்டு, அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டான், அந்த சீடன். என்ன செய்வது? சில முசுடுகளை இப்படித்தான் தட்டி வைக்க வேண்டியுள்ளது!