முருகனைப் போல் புகழ் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
தமிழகத்தில் அனைத்து தெய்வ வழிபாடு இருந்தாலும், ஓங்கி உயர்ந்து நிற்பது முருகன் வழிபாடு தான். அவரை தழிழ் தெய்வம் என சிறப்பு பெயரிட்டு அழைக்கும் அளவுக்கு, அவரது புகழ் ஓங்கியிருக்கிறது. இதனால் தானோ என்னவோ, முருகனைப் புகழ்ந்து திருவண்ணாமலை புலவர் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பை திருப்புகழ் என்றார்களோ என்னவோ! தாயாயினும், தந்தையாயினும், தமையனாயினும், நீதிக்குப்பின் பாசம் என்பதை நிலை நாட்டியவர், அவர். அவருக்கே பழங்களின் கலவையான பஞ்சாமிர்தமே படைக்கும் போது, சாதாரண பழத்துக்காக அவர் போராடவில்லை. பழத்தைக் காரணம் காட்டி, நீதியை நிலை நாட்ட போராடினார். அதே நேரம் தமையனும், தன் தம்பிக்கே பழத்தைத் திருப்பிக் கொடுக்க முன் வந்ததன் மூலம், ஒரு குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எத்தகைய சிறப்புடையது என்பதை நிலை நாட்டினார். இத்தகைய புகழ், நமக்கும் கிடைக்க வேண்டுமானால், மகாளய பட்ச சஷ்டி திதியான இன்று, நம் முன்னோரை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால், அவர்களது ஆசியுடன், நாமும் புகழ் பெற்ற குடும்பம் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.