பிறக்கப் போகிறது புத்திசாலி பிள்ளை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
பிறக்கப் போகிறது புத்திசாலி பிள்ளை ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை, அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை என்பது பழைய பாட்டிலுள்ள ஒரு வரி. சிலர் குழந்தை இல்லை என ஏங்குகிறார்கள். பலர், பெற்ற பிள்ளை அசமந்தமாக இருக்கிறதே! படிப்பு சரியில்லையே! சேஷ்டைகளில் மட்டும் கவனம் செலுத்துகிறதே! ஒழுக்கம் என்பது மருந்துக்கு கூட இல்லையே! என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பூர்வஜென்ம வினை தான். இந்த வினையை விரட்டுவதற்கான பரிகாரம் தான் மகாளய பட்ச அஷ்டமி விரதம். இந்த நாளில், பெற்றவர்களையும், ரத்த பந்த உறவுகளையும் இழந்தவர்கள், பகலில் பட்டினி விரதம் இருக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள், உடைத்த அரிசியில் செய்த உப்புமா, பழ வகைகள், பால் சாப்பிடலாம். தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து அவர்கள் படத்துக்கு மாலை அணிவித்து வணங்க வேண்டும். மாலையில், பைரவர் அல்லது பிரத்யங்கிரா தேவியை வணங்கி, தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும் வகையில் பிள்ளைகள் மனம் மாற, வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தால், புத்திசாலி குழந்தைகளும் பிறக்கும். மகாளய பட்சத்தில் அஷ்டமி திதி மிகவும் முக்கியமானது.