உறவுகள் வலுப்பட ஒன்று கூடுவோம்! | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஒரு காலத்தில், மகாளய அமாவாசை காலத்தில், நம் முன்னோர்களெல்லாம் நேரடியாகவே பூமியில் வந்து கூடினார்களாம். ராமர் அழைத்ததும், அவரது தந்தை தசரதர் பிதுர்லோகத்தில் இருந்து பூமிக்கு வந்தார். இன்றைய கலியுகத்தில், இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இருப்பினும், நம் மனக்கண்களால் நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா, தம்பி, அண்ணன், குழந்தைகள் என மறைந்து போன எல்லா உறவுகளும், நம் வீட்டுக்கு வருவதாக நாம் கற்பனை செய்து கொண்டாலே போதும். அவர்களெல்லாம் நம்முடன் இருப்பது போல தோன்றும். அவர்களுடன் பொழுது போக்குவது போல நாம் பாவனையும் செய்து கொள்ளலாம். அந்நேரத்தில் மனம் பழைய நினைவுகளை எண்ணி கும்மாளம் போடும். அவர்கள் மறைந்து விட்ட வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் நம்மோடு இன்றும் இருப்பதாக பாவனை செய்து கொண்டால் மனம் கும்மாளம் போடும். இன்று மகாளய அமாவாசை. புரட்டாசி மாத அமாவாசையை மகாளயம் என்பர். மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் எனப்பொருள். இன்று தர்ப்பணம் கொடுத்து விட்டு, மதிய வேளையில் முன்னோருக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து படைக்க வேண்டும். காகங்களுக்கு உணவிட வேண்டும். முன்னோர் பற்றிய தகவல்களை இளம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இது காலம் காலமாய் உறவு வலுப்பட வழி வகுக்கும்.