உளுந்து வடை கட்டாயம் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar
உளுந்து வடை கட்டாயம் உங்கள் வீட்டில் எந்த தெய்வத்துக்கு பூஜை செய்தாலும், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், கல்கண்டு சாதம், தக்காளி சாதம், இனிப்பு வகைகள், பழ வகைகள் என நைவேத்யங்கள் களை கட்டும்ஞூ. ஆனால், எத்தனை பிரசாத வகைகளை அடுக்கி வைத்தாலும், உளுந்து வடை இல்லாமல் பூஜை செய்யக்கூடாது. இது ஆஞ்சநேயருக்கு மிகவும் விருப்பமானது. ராம நாமமும், உளுந்து வடை நைவேத்யமும் இருந்தால், ஆஞ்சநேயர் அங்கே எழுந்தருளி விடுவார். அங்கே நடக்க இருக்கின்ற பூஜையை எந்த வித தடங்கலும் இல்லாமல் முடித்து தந்து விடுவார். அது மட்டுமல்ல, ஆதிசங்கரர் அம்பாளைப் பற்றி இயற்றிய சவுந்தர்ய லஹரி ஸ்லோகங்களை அம்பாள் முன் அமர்ந்து நீங்கள் சொல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது, நீங்கள் அம்பாளுக்கு படைக்க வேண்டியது உளுந்து வடை. இதிலுள்ள செல்வவளம் தரும் ஸ்லோகங்களைச் சொல்லும் போது, உளுந்து வடையை அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, குழந்தைகளுக்கு பிரசாதமாகக் கொடுங்கள். வீட்டில் செல்வவளம் பெருகும்.