தெப்பம் வலம் வந்து மைய மண்டபம் எழுந்தருளிய சுவாமி - அம்மன்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று மதியம் சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருளிய பின்னர் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூதச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் எழுந்தருளி விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் மிதவை தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்து வரப்பட்டனர். பின்னர் கிராமத்தினருக்கு கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.