20 படி அரிசியில் புளியோதரை பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவம்
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமையான ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இங்கு ஆடி மாத முதல் நாளையொட்டி இன்று தட்சிணாயன புண்ணியகால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக மூலவர் சீனிவாசப் பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவர் முன்பாக 10 அடி உயரத்தில் 20 படி அரிசியில் புளியோதரை படையலிடப்பட்டது. முறுக்கு, அதிரசம், தோசை, ஜாங்கிரி, மெதுவடை, இனிப்பு அப்பம், காரா பூந்தி, காராச்சேவு உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் மற்றும் முக்கனிகளைக் கொண்டு பிரம்மாண்டமான அன்னக்கூட உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. புளியோதரை உள்ளிட்ட பொருட்களை கொண்டு பெருமாள் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெருமாள் சுவாமிக்கு படையலிட்ட உணவு பதார்த்தங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாள் சுவாமியை மனமுருக வேண்டினர்.