மலைக்க வைக்கும் திருப்பதி பிரசாத வரலாறு | Tirupati Devasthanam | Laddu Prasadham
ஆந்திராவில் திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் உலக அளவில் புகழ்பெற்றது. பழனிக்கு பஞ்சாமிர்தம், சபரிமலை அரவணை பாயாசம் போல திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு இல்லாமல் ஆன்மிக பயணம் முழுமை பெறாது. இப்படி புகழ்பெற்ற திருப்பதி லட்டு வரலாறு தெரிய வேண்டும் என்றால் 300 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 1715 ஆகஸ்ட் 2ல் திருப்பதி ஏழுமலையானுக்கு லட்டு பிரசாதமாக படைக்கும் முறை தோன்றியது. அதற்கு முன் தயிர் சாதம், சுய்யம், அப்பம், கறுப்பு உளுந்து வடை, அதிரசம், மனோகரம் எனப்படும் இனிப்பு முறுக்கு பூஜையின் போது படைக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக 1715ல் ஏழுமலையானுக்கு லட்டு படைக்கப்பட்டாலும் அது பக்தர்களுக்கு வழங்கப்படவில்லை. 1803 முதல் பக்தர்களுக்கு பூந்தியாக பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. ஜமீன்தார்கள், முக்கியஸ்தர்களுக்கு மட்டும் முழு லட்டு வழங்கப்பட்டது. 1932ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவானது.