உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 2018க்குப் பின் தெருநாய்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு | 1 Lakg stray Dogs Menacing channai

2018க்குப் பின் தெருநாய்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு | 1 Lakg stray Dogs Menacing channai

சென்னை மாநகராட்சியில் 2018ம் ஆண்டிற்குப் பின் தெருநாய்கள் கணக்கெடுப்பு பணியை ஜூன் மாத இறுதியில் மாநகராட்சி துவக்குகிறது. தற்போதைய நிலையில் சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கலாம் என மாநகராட்சி உத்தேசித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்கள் குறித்த விபரங்கள் மூன்றாண்டுகள் இடைவெளியில் கணக்கெடுக்கப்பட்டு வந்தன. அப்போது தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் தடுப்பூசிகள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டன. கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தெருநாய்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அப்போது, 68,577 தெருநாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவற்றிற்கு கருத்தடை மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அடுத்து 2021 - 22ம் காலக்கட்டத்தில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற இருந்த நிலையில் கோவிட் காரணமாக தெருநாய்கள் கணக்கெடுப்பும், கருத்தடை நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது. அந்த காலகட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தது. கடந்த 2023 நவம்பரில் தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதியில்ரேபிஸ் நோய் பாதித்த தெருநாய் கடித்ததில், 27 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சென்னையில் மட்டும், ஆண்டிற்கு ஐந்திற்கும் மேற்பட்டோர், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதேநேரம், நாய்கள் கடித்து,100க்கும் மேற்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். எனவே தெருநாய்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை வருகிறது. முதற்கட்டமாக, 2023ல் ராயபுரம் மண்டலத்தில் தெருநாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 3,901 தெருநாய்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றிற்கு தடுப்பூசி போட்டு கருத்தடை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்கள் குறித்த கணக்கெடுப்பை வரும் ஜூன் மாத இறுதியில் நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் கால்நடை மருத்துவ அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் தெருநாய்கள் தொல்லை குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன. அதன் அடிப்படையில் மாநகராட்சி பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து இனக்கட்டுப்பாடு செய்யும் பணி மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. தெருநாய்களை பிடிப்பதற்கு 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஐந்து பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவர் இருப்பார். நாய்களை பிடிப்பதற்காக 64 வலைகள் தயார் நிலையில் உள்ளது. அத்துடன் கருத்தடை செய்ய பேசின் பாலம், கண்ணாம்மாப்பேட்டை, லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில், கால்நடை மருத்துவமனைகள் செயல்படுகின்றன. ஆனாலும் கருத்தடை செய்யப்படாத தெருநாய்கள் ஓராண்டிற்கு இருமுறை கருத்தரிக்கும். ஒவ்வொரு முறையும் குறைந்தது ஏழு குட்டிகள் வரை ஈனுகின்றன. அதில் ஐந்து குட்டிகள் வரை பல்வேறு காரணங்களால் உயிரிழந்தாலும் மூன்று குட்டிகள் உயிர் பிழைக்கும். கடந்தாண்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட கணக்கீட்டின்படி 93,000 தெருநாய்கள் கணக்கிடப்பட்டுள்ளன.அதேநேரம் இந்தாண்டுக்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை பருவமழைக்கு முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தெருநாய்கள் பிடிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் வண்ணம் பூசப்பட்டு கணக்கிடப்படும். பிடிக்கப்படும் நாய்க்கு ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்டிருந்தால் ஒட்டுண்ணி மற்றும் ரேபிஸ் தடுப்பூசி மட்டும் செலுத்தப்படும். கருத்தடை செய்யப்படாத நாய்களுக்கு மூன்றும் சேர்த்து செய்யப்பட்டு பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடப்படும். கோவிட்டுக்கு பின் தெருநாய்கள் இனப்பெருக்க தடை சிகிச்சை திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாமல் போனது. இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து, பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, விலங்குகள் இனப்பெருக்க தடை திட்டத்தை முறையாக செயல்படுத்த 20 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்புத் துறைக்கு மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மே 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை