மழை, சூறாவளி கைகோர்த்து மிரட்டும் என எச்சரிக்கை | heavy rain alert | TN
கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் கோவை, நீலகிரி, கடலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி பகுதியில் பலத்த தரைக்காற்றும் வீசக்கூடும். அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரும். சென்னையை பொறுத்த வரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரம், குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 8 வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.