விமான நிலையத்தில் முடங்கிய பயணிகள் | Chennai | International technical disorder
சென்னை விமான நிலைய இணையதள சேவை பகல் 12 மணியளவில் திடீரென முடங்கியது. இணையதளம் சரியாக வேலை செய்யாமல், மிகவும் தாமதமாக செயல்பட்டதால், விமான பயணிகளுக்கு, கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விமான நிறுவனங்கள், கவுண்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோவை, தூத்துக்குடி, திருச்சி, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா,புனே, கோவா மற்றும் சர்வதேச விமானங்களான சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை டாக்கா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட விமானங்கள், சென்னையில் இருந்து 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். விமான சேவை தாமதத்திற்கு என்ன காரணம், எப்போது நிலைமை சீராகும் என பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் மைக்ரோசாப்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து சரி செய்யப்பட்டு விமானங்கள் புறப்பட்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.