மாமல்லை சிற்பியை கொத்தி சென்ற பிரான்ஸ் பறவையின் காதல் கதை | Mamallpuram | love story of french lady
மாமல்லபுரத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் சீனிவாசன். மாமல்லபுரம் கல்லூரியில் கல் சிற்பம் பிரிவில் பட்டம் பெற்றவர். படிப்பு முடிந்ததும் கல் சிற்பங்கள் வடிக்க துவங்கினார். 2001ம் ஆண்டில் பிரான்சை சேர்ந்த கேப்ரியேல் என்ற பெண் மாமல்லபுரம் வந்தார். கடற்கரை கோயில், ஐந்துரதம் சிற்பங்களை பார்த்து வியந்தார். எப்படியாவது இந்த சிற்ப கலையை கற்றே தீர வேண்டும் என்று விரும்பினார். சீனிவாசனின் சிற்ப கலை பற்றி கேள்விப்பட்டார். அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு நடந்த போது சீனிவாசன் வயது 26. கேப்ரியேல் வயது 24. சீனிவாசனிடம் கல் சிற்பம் கற்க துவங்கினார் பிரான்ஸ் பெண். உளியை பிடித்து கல்லில் ஓங்கி அடித்தார். படிப்படியாக சிற்பியாக உருமாறினார். இடைப்பட்ட காலத்தில் சீனிவாசனை கேப்ரியேலுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. கலை கற்றுத்தந்த குருவிடம் காதலை சொன்னார். அவருக்கும் கேப்ரியேல் மீது அலாதி பிரியம். 2004 அக்டோபர் மாதம் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். கையோடு சீனிவாசனை பிரான்சுக்கு அழைத்து சென்றார் கேப்ரியேல். அங்கு சிற்ப தொழிலை துவங்கினர். வகை வகையான சிற்பங்களை வடிவமைத்தார் சீனிவாசன். வெளியே சென்று ஆர்டர் பிடித்து வந்தார் கேப்ரியேல். ஒரு கட்டத்தில் ஆர்டர்கள் குவிய துவங்கின. அதன் பிறகு 2 பேருமே சிற்பம் செதுக்குவதில் பிஸி ஆகிவிட்டனர். ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் தம்பதி மாமல்லபுரம் வருவர். சில மாதங்கள் தங்கி இருப்பர். இந்த நாட்களையும் வீணடிக்காமல் சிற்பம் செதுக்கி மாமல்லபுரம் வட்டாரத்தில் விற்பனை செய்வர். இப்போது பிரான்சில் இருந்து மாமல்லபுரத்துக்கு தம்பதியினர் வந்துள்ளனர். விநாயகர், பிரம்மா, விஷ்ணு, முருகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட கடவுள் சிற்பங்களை செதுக்கி அசத்துகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சமூக சேவகியும் பெண் மதகுருவுமான தெரேசா பான்து உருவ சிலையை தத்ரூபமாக வடித்துள்ளார் கேப்ரியேல்.