உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 35 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசம்| Mavidapuram kandasamy temple| Jaffna

35 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசம்| Mavidapuram kandasamy temple| Jaffna

35 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசம்/ Mavidapuram kandasamy temple/ Jaffna இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது . யாழ்ப்பாண நகரிலிருந்து இந்த கோயில் சுமார் ஒன்பது மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் 25 நாட்கள் நடைபெறும் மஹோத்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், உள்நாட்டு போர் மற்றும் அதன் விளைவுகளால் கடந்த 35 ஆண்டுகள் மஹோத்சவம் நடைபெறவில்லை. மேலும்,பழமையான கோயில் சிதிலமடைந்ததால், ராஜகோபுரம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு புணரமைப்பு பணிகள் நிறைவடைந்து, இந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி மாவை ஆதீன ரத்னசபாபதி குருக்கள் தலைமையில் விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், 35 ஆண்டுகளுக்கு பின் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் மஹோத்சவம் ஜூன் 30ம் தேதி, நூதன வெள்ளி ஸ்தம்ப பிரதிஷ்டை மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. 25 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் ஒரு பகுதியாக, ஜூலை 22ம் தேதி இரவு சப்பைரதம் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில், சுமார் 64 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட தெருவெடைச்சான் சப்பரத்தில் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஜூலை 23ம் தேதி பஞ்ச ரத உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிறப்பு தேரில் பஞ்ச மூர்த்திகள் பிரவேசித்தனர்.. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். பின்னர் , பச்சை சாத்தி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான 25வது உற்சவ நாளில், சுவாமிக்கு தீர்த்த உற்சவம் நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், தீர்த்தவாரி உற்சவத்திற்கு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் சென்றடைந்தார். அங்கு, விநாயகர், நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் , வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், கீரிமலை முத்துமாரியம்மன் சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தீர்த்த உற்சவம் கண்ட பின், முருகப்பெருமான் மாவிடபுரம் வந்தடைந்தார். சிறப்பு யாக கும்ப அபிஷேகத்தை தொடர்ந்து, உற்சவ கொடி இறக்கப்பட்டது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் முருகனை தரிசித்து மனமுருகினர்.

ஜூலை 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி