தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு | Monsoon starts early | TN
லட்சத்தீவு மற்றும் கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது படிப்படியாக வலுவடைந்து அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகலாம். அதன்பின் புயல் சின்னமாக வலுவடையவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விலகலுக்கான கால அட்டவணை அடிப்படையில், அக்டோபர் 18ல் வடகிழக்கு பருவ மழை துவங்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது வங்கக்கடல், அரபிக்கடலில் நிலவும் சூழலை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்கள் முன்னதாக துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.