திமுகவினர் கொடிகளை பதுக்கும் யுக்தியால் வெற்றி வாய்ப்பு பறிபோகும்?
திமுகவினர் கொடிகளை பதுக்கும் யுக்தியால் வெற்றி வாய்ப்பு பறிபோகும்? | Tambaram | Opposition against the Tambaram candidate தாம்பரம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ராஜாவுக்கு சீட் மறுக்கப்பட்ட விவகாரம், வெறும் முற்றுகை போராட்டத்தோடு நிற்காமல், இப்போது தேர்தல் பிரச்சாரக்களத்தில் கொடி விவகாரத்திலும் விஸ்வரூபம் எடுத்து, உட்கட்சிப் பூசல் எரிமலையாய் வெடித்துள்ளது. நேற்று தாம்பரத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா திமுக வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் மட்டுமே பறந்தன. திமுக கொடி ஒரு இடத்தில் கூட இல்லை. ராஜாவின் ஆதரவாளர்கள், திமுக அறிவித்துள்ள வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக கொடிகளை கட்டாமல் ஒட்டுமொத்தமாகப் ரோட்டோரத்தில் போட்டு வைத்திருந்தனர். வேட்பாளர் கிருத்திகா தேவியின் பிரச்சாரத்தில் திமுக அடையாளமே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ராஜா ஆதரவாளர்கள் இந்த கொடி பதுக்கல் யுக்தியைக் கையாண்டுள்ளனர். வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும் திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவின் வீடு போராட்டக் களமாக மாறியது. வெளிநபரை ஏற்க மாட்டோம், 3 முறை வெற்றி பெற்ற ராஜாவிற்கே மீண்டும் வாய்ப்பு தா என முழக்கமிட்டு 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் ராஜாவுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படும் என டி.ஆர். பாலு சமாதானம் செய்தார். இருப்பினும், தொண்டர்கள் அதை ஏற்க மறுத்து பலவகையில் போராடி வருகின்றனர். தலைமை உடனடியாகத் தலையிட்டுச் சமாதானம் செய்யாவிட்டால், தாம்பரம் தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறிதான் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.