பீதியில் வாக்காளர்களுக்கு கவனிப்பு காட்டும் முக்கிய கட்சிகள்
பீதியில் வாக்காளர்களுக்கு கவனிப்பு காட்டும் முக்கிய கட்சிகள் | Panicked Major parties show concern for voters | Tamilnadu தமிழகம் நாளை சந்திக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி இழுபறி என பல்வேறு கருத்து கணிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது. இதனால் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்து கடைசி கட்ட முயற்சியில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாநிலம் முழுதும் 75,064 ஓட்டுச்சாவடிகளை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நாளை நிறைவேற்ற உள்ளனர். பலமான கூட்டணி இத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., உள்ளிட்ட 22 கட்சிகளுடன் இணைந்து தி.மு.க., மெகா கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., உள்ளிட்ட 12 கட்சிகளை இணைத்து அ.தி.மு.க.,வும் பலமான கூட்டணியை அமைத்துள்ளது. இந்த தேர்தல் களத்தில் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர்களான தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சேலம் இடைப்பாடி தொகுதியிலும் களமிறங்கியுள்ளனர். புதிய வரவான த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், காரைக்குடி தொகுதியில் களம் காண்கிறார். அதிகபட்சமாக அ.தி.மு.க., 166 தொகுதிகளிலும், தி.மு.க., நேரடியாக 164 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள தொகுதிகளை தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு இரு தரப்பும் ஒதுக்கி கொடுத்துள்ளன. இவற்றில் சில கட்சிகளுக்கு சொந்தமாக சின்னம் இல்லை என்பதால், கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிடுகின்றன. கடந்த மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியதும் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நா.த.க., தலைவர்கள் பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் முழுதும் வலம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாகன பிரசாரத்திற்கு மாற்றாக முதல்வர் ஸ்டாலின், பிர்சார கூட்டங்களில் அதிகளவில் பங்கேற்றார். ஆளும் கட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு ஆதரவு திரட்டினார். அதோடு மத்திய பா.ஜ., அரசின் பாரபட்சம் குறித்தும் குற்றம் சாட்டினார். அதற்கு எதிராகவும் ஆளும் கட்சி மீதான குறைகளையும் சுட்டிக்காட்டி பழனிசாமி, விஜய், சீமான் ஆகியோர் பிரசாரம் செய்தனர். குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை மையப்படுத்தி இவர்களின் பிரசாரம் இருந்தது. கடந்த ஒரு மாதமாக களைகட்டிய பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. முதல்வர் ஸ்டாலின் கொளத்துாரிலும், பழனிசாமி சேலத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர். சென்னையில் சாலை மார்க்கமாக வலம் வந்து ஆதரவு திரட்டிய விஜய், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். காரைக்குடியில் சீமான் தன் பிரசாரத்தை முடித்தார். தேர்தல் பிரசாரம் முடிந்ததை தொடர்ந்து, பணப் பட்டுவாடா உள்ளிட்ட வாக்காளர்கள் கவனிப்பு நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அவற்றைத் தடுக்க தேர்தல் கமிஷன் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு உத்தரவுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பிறப்பித்துள்ளார். இதற்கிடையே ஆட்சியை பிடிப்பதற்கான கடைசி கட்ட முயற்சிகளில் பிரதான கட்சிகள் இறங்கியுள்ளன. வாக்காளர்களுக்கு இறுதிகட்ட கவனிப்புகள் பல தொகுதிகளில் களைகட்டியுள்ளன. கடந்த ஒரு மாதமாக நடந்த பிரசாரம் மற்றும் மக்கள் மனநிலையை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு தரப்புக்கும் அமோக ஆதரவை தரும் விதமாக இருக்காது என்பது தெரியவந்துள்ளது. வெற்றி இழுபறி என்பதும் உறுதியாகியுள்ளது. இது ஒரு மாதமாக களத்தை சுற்றி வந்து, மக்களை சந்தித்த பெரிய கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.