தர்பூசணி பழத்தில் ஊசியில் ரசாயனம் செலுத்துவதாக வதந்தி| watermelon farmers |Madras High Court
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாகக் கூறி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் பிரச்சாரம் செய்ததால் தர்பூசணி வியாபாரம் படுத்தது. இதனல் தர்பூசணி விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. தர்பூசணிகள் விற்பனையாகாததால் டன் கணக்கில் அழுகி வீணானது. தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தோட்டக்கலைத் துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் வேண்டுமென்றே பொதுமக்களிடையே தவறான பிரச்சாரத்தை பரப்பியதால், தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இழப்பீடு கோரி விவசாயிகள் அளித்துள்ள மனுவை எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.