புல்லட் காட்டு யானை பிரச்னை முடிந்த ஓரிரு நாளில் மற்றொரு காட்டு யானை அட்டகாசம்
புல்லட் காட்டு யானை பிரச்னை முடிந்த ஓரிரு நாளில் மற்றொரு காட்டு யானை அட்டகாசம் | Another wild elepant is attrasity நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஓர்க்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், வயது 58. இவர் நேற்றிரவு 8 மணிக்கு வீட்டிற்கு முன்பாக உள்ள தெரு விளக்கு கம்பத்தில் சுவிட்ச் போட வந்தார். அப்போது அங்குள்ள தேயிலை தோட்டம் வழியாக சாலைக்கு இறங்கி வந்த ஒற்றை காட்டு யானை பாலகிருஷ்ணனை தாக்கி தூக்கி வீசியது. அவரின் அலறல் மற்றும் யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். தொடர்ந்து சத்தம் எழுப்பி யானையை அங்கிருந்து துரத்தினர். வனத்துறை உதவியுடன் காயமடைந்த பாலகிருஷ்ணனை, பந்தலூர் அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். மேல் சிகிச்சைக்காக வயநாடு தனியார் ஹாஸ்பிடலில் சேர்த்தனர். கிராமங்களில் முகாமிடும் யானைகளை அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும். காயமடைந்த பாலகிருஷ்ணனுக்கு நிதி உதவியை வனத்துறை வழங்க வேண்டும் என வலியுறுத்தி குந்தலாடி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். வனச்சரகர் ரவி, டி.எஸ்.பி. சரவணன், எம். எல். ஏ. ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வனவர் சுதீர், வி.ஏ.ஓ. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி, வார்டு உறுப்பினர் ஜோஸ் குட்டி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பாலகிருஷ்ணனக்கு வனத்துறை மூலம் முதல்கட்டமாக 59 ஆயிரம் ரூபாய் வழங்கவும், ஹாஸ்பிடல் சென்று நோயாளி நிலையை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்று மதியம் கடைகள் திறக்கப்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்றனர். கிராமத்தை ஒட்டி முகாமிட்டுள்ள யானைகளை வனத்திற்குள் துரத்தும் பணியில் வனக்குழுவினர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பந்தலுார் பகுதியில் மனிதர்களை தாக்கி, வீடுகளை நொறுக்கி அட்ராசிட்டியில் ஈடுபட்டு வந்த புல்லட் யானை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது. திருகு வலி போய் முதுகு வலி வந்த கதையாக புல்லட் யானை அட்டகாசம் ஓய்ந்த நிலையில் மற்றொரு காட்டு யானை ஊருக்குள் புகுந்து மனிதர்களை தக்கி வரும் சம்பவம் குடியிருப்போரை அச்சத்தில் ஆழ்த்தியது.