அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட பங்கேற்காதது ஏன் | Tirupur | Basketball match
திருப்பூரில் தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சிவசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தனர். 14, 17, 19 வயது பிரிவினருக்கு நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. 20 அணிகள் பங்கேற்றன. தெற்கு குறுமையத்தில் 70 க்கும் அதிகமான அரசு பள்ளிகள் இருந்தும் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க ஒரு அரசு பள்ளி வீரர்கள் கூட பதிவு செய்யவில்லை. தனியார் பள்ளி வீரர்களே பங்கேற்றனர். 14 வயது பிரிவினருக்கான இறுதி போட்டியில் துவக்கம் முதலே அசத்தி வந்த விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர், அடுத்தடுத்த புள்ளிகளை குவித்து 12 புள்ளிகளை எட்டினர். தடுத்து ஆடிய, விகாஸ் வித்யாலயா பள்ளி, 2 புள்ளிகளை எடுத்தது. 12 - 2 என்ற புள்ளிக்கணக்கில், விவேகானந்தா அணி வெற்றி பெற்றது. பதினேழு வயது மாணவியர் பிரிவுக்கான போட்டியில் கடைசி வரை போராடிய, பிரன்ட்லைன் பள்ளி அணி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணியிடம், 12 - 8 என்ற புள்ளிகணக்கில் தோற்றது. அடுத்து துவங்கிய, 17 வயது மாணவருக்கான போட்டியில், துவக்கம் முதலே, லிட்டில் பிளவர் - பிரன்ட்லைன் அணி வீரர்கள் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். ஆட்ட நேர இறுதிக்கு முன், லிட்டில் பிளவர் பள்ளி அணியின் கை ஒங்கியது. 29 - 19 என்ற புள்ளிக்கணக்கில் லிட்டில் பிளவர் பள்ளி அணி வெற்றி பெற்று அசத்தியது.