இறுதிப்போட்டிக்கு ஒய்.எம்.சி.ஏ, அல்வேர்னியா அணிகள் தகுதி | Coimbatore | District Basketball
இறுதிப்போட்டிக்கு ஒய்.எம்.சி.ஏ, அல்வேர்னியா அணிகள் தகுதி | Coimbatore | District Basketball Tournament லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்துார் ஓரியன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோவை காட்டன் சிட்டி சார்பில் 14 ம் ஆண்டு லயன்ஸ் ஓரியன் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கான சிறுவர் பிரிவு போட்டியின் இரண்டாம்சுற்றில் ஆர்.கே.எஸ் அகாடமி அணி 50 - 49 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.வி.ஜி.வி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. ஆர்.கே.எஸ் அணியின் ஆகாஷ் 30 புள்ளிகள் எடுத்தார். மற்றொரு போட்டியில் யங் பிளட்ஸ் அணி 61 - 54 என்ற புள்ளிக்கணக்கில் பாரதி பள்ளி அணியை வீழ்த்தியது. யங் பிளட்ஸ் அணியின் ஸ்ரீஜித் 34 புள்ளிகள் சேர்த்தார். ஒய்.எம்.சி.ஏ அணி 61 - 20 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளியையும், ராஜலட்சுமி மில்ஸ் அணி 31- 19 என்ற புள்ளிக்கணக்கில் பெர்க்ஸ் அணியையும் வீழ்த்தின. மாணவியர் பிரிவு அரையிறுதிப்போட்டியில் ஒய்.எம்.சி.ஏ அணி 37 - 9 என்ற புள்ளிக்கணக்கில் பாரதி பள்ளியையும், அல்வேர்னியா பள்ளி அணி 27 - 7 என்ற புள்ளிக்கணக்கில் யுனைடெட் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.