அண்ணாமலை வெற்றி வாய்ப்பு பறிபோனது ஏன்? | Coimbatore | BJP Annamalai debacle | LS Election 2024
தமிழகத்தில் கடந்த ஒர் ஆண்டாகவே ஊடகங்கள், பத்திரிகைகளில் அதிகம் இடம் பெற்ற பெயர் அண்ணாமலை. கோவை லோக்சபா தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு வெளியானதில் இருந்து கோவை தொகுதிக்கு ஸ்டார் அந்தஸ்து ஒட்டிக்கொண்டது. பாஜவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக வாக்காளர்கள் கருதினர். ஓட்டு பதிவு அன்று அனைவரும் சொன்ன வார்த்தை அண்ணாமலைக்குத்தான் ஓட்டு போட்டோம் என்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் கோவை தொகுதிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அண்ணாமலை வெற்றி பெற்றதும் மத்திய அமைச்சர் பதவி பெறுவார். கோவை தொகுதியில் பல புதிய திட்டங்கள் வரும் என பேசப்பட்டது. அப்படி இருந்தும் அண்ணாமலை தோல்வியை தழுவினார். கட்சியின் கொள்கைகள் எதுவாகினும் கோவை தொகுதியில் உள்ள சிறுபான்மையினரிடம் அண்ணாமலையின் அணுகுமுறை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதனால் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த சிறுபான்மையினர் ஒட்டு உள்பட மொத்த ஓட்டுகளையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே திமுக அள்ளியது. திமுகவின் கூட்டணி பலன் உள்ளங்கை நெல்லிக்கனியாக திமுக கூட்டணிக்கு ஓட்டு வங்கியாக மாறியது. தொகுதி மேம்பாடு வளர்ச்சி என ஒரு புறம் இருந்தாலும் கொள்கை ரீதியாக பாஜவை எதிர்க்கும் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் உள்ளிட்ட பலரும் அவருக்கு எதிராக ஓட்டு போட்டு இருப்பது திமுகவின் பிரமாண்ட வெற்றிக்கு காரணம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். எல்லா காரணங்களும் ஒருபுறம் இருந்தாலும் கோவையை பொறுத்தவரை எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் யாராக இருந்தாலும் வெளியூர்காரர்கள் இதுவரை ஜெயித்ததில்லை என்ற வரலாறும் உள்ளது. உள்ளூர்காரரான பாஜவின் வானதி சட்டசபை தேர்தலில் வெறும் இரண்டாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, கோவையின் அனைத்து தரப்பு வாக்காளர்களையும் திருப்பதிபடுத்தும் வகையில் பாஜகவின் வேகம் விவேகமாக மாற வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.