மத்திய அரசு நேரடி கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு லாபம் | cauldron price increase
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயித்து மத்திய அரசின், நேபட் நிறுவனம் மூலம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் 22,950 டன் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. இம்மையங்கள் கடந்த மார்ச் 13ம் தேதி துவக்கப்பட்டது. வரும் ஜூன் 10ம் தேதி வரை கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இம்மையங்களில் அரவை கொப்பரை கிலோ 111 ரூபாய் 60 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 296 கிலோ கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு பாஸ் புத்தகம் நகல், கம்ப்யூட்டர் சிட்டா, வி.ஏ.ஓ. சான்று, போட்டோ ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து உற்பத்தி செய்த கொப்பரையை விற்பனை செய்யலாம். உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் துவக்கப்பட்ட, கொப்பரை கொள்முதல் மையத்தில் 3,250 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இம்மையத்தில் 52 விவசாயிகளிடமிருந்து 82.250 டன் கொப்பரை 91 லட்சத்து 79 ஆயிரத்து, 100 ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டது.