நம்பி ஓட்டளித்தசிறுபான்மைமக்களுக்கு செய்யும் உதவி:வானதி |Coimbatore| Representation on Waqf Board
வக்ஃப் வாரிய திருத்த மசோதா 40 திருத்தங்களுடன் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தேசிய மகளிர் அணி தலைவர் வானதி தனது அறிக்கையில் கூறியதாவது, முஸ்லீம் சகோதரிகளுக்கு மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில வக்ஃப் வாரியத்திலும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற சட்ட திருத்தம் அனைத்து முஸ்லீம் சகோதரிகளின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில வக்ஃப் வாரியத்திலும் குறைந்தது 2 இஸ்லாமிய பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற சட்ட திருத்தம் அனைத்து இஸ்லாமிய சகோதரிகளின் மத்தியில் மகிழ்ச்சியளிக்கிறது. வக்ஃப் சொத்துக்களின் பலன்கள், இஸ்லாமிய விதவைப் பெண்கள், விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் ஆகியோரின் பராமரிப்புகளுக்கு பயன்படுமாறும், அவர்களின் சொத்துரிமை பறிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளையும் கண்ணிய வாழ்வையும் உறுதிசெய்வதில், பிரதமர் மோடி முன்னோடியாகத் திகழ்கிறார். எதிர்க்கட்சிகள் பிரிவினையைத் தூண்டி, மதரீதியான பிரச்சினைகளை உருவாக்குவதைத் தவிர்த்து ஏழை எளிய இஸ்லாமிய சகோதரிகளும் பயன்பெறும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தை வரவேற்பதுதான், அவர்களை நம்பி ஓட்டளித்த சிறுபான்மை மக்களுக்கு செய்யும் உதவி என தெரிவித்துள்ளார்.