113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி | cricket match | Kovai
கோவை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மண்டல மைய மைதானத்தில் கடந்த 20ம் தேதி துவங்கியது. போட்டியை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் விமலா துவக்கி வைத்தார். முதல் போட்டி கிரைஸ்ட் தி கிங் கல்லுாரிக்கும், அரசு தொழில்நுட்பக் கல்லுாரி ஜி.சி.டி. அணிக்கும் இடையே நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஜி.சி.டி. கல்லுாரி அணி, 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய கிரைஸ்ட் தி கிங் அணியினர் 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். இரண்டாவது ஆட்டத்தில் சி.எஸ்.ஐ. அணியும், பி.பி.ஜி.ஐ.டி. அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பி.பி.ஜி.ஐ.டி. அணி, 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சி.எஸ்.ஐ. அணி 11.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. மூன்றாவது ஆட்டத்தில் பி.பி.ஜி. பி.எஸ். அணியும், கே.சி.டி. அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கே.சி.டி. அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து 312 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய பி.பி.ஜி.பி.எஸ். அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. அண்ண பல்கலை மண்டல மையம் மற்றும் இன்போ டெக் கல்லுாரிக்கு இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அண்ணா பல்கலை அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இன்போ கல்லுாரி அணி 18.4 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அண்ணா பல்கலை அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டிகள் அக்டோபர் 25ம் தேதி வரை நடக்கிறது.