வேரமாங்கா பகுதியில் சூறாவளி; 5,000 நேந்திரன் வாழைகள் சேதம் | Cyclone damages 5,000 Banana trees
வேரமாங்கா பகுதியில் சூறாவளி; 5,000 நேந்திரன் வாழைகள் சேதம் / Cyclone damages 5,000 Banana trees / pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து சூறாவளி காற்று வீசியதில் அம்பலமூலா அருகே வேரமாங்கா பகுதியில் இருந்த நேந்திரன் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமானது. யோ கண்ணன் என்பவர் குத்தகை நிலத்தில் பயிரிட்டிருந்த 2000 வாழை மரங்கள் மற்றும் பிரபாத் என்பவர் பயிரிட்டு இருந்த 2000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமானது. அறுவடைக்கு மூன்று மாதமே உள்ள நிலையில் இருந்த வாழைத்தார்கள் முற்றிலும் வீணானதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை விஏஓ அசோக்குமார் மற்றும் உதவியாளர்கள் ஆய்வு செய்தனர். விஏஓ கூறுகையில், கடுமையான சூறாவளி காற்றுடன் பெய்த மழையில், இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு இருந்த ஐந்தாயிரம் வாழை மரங்கள் அடியோடு விழுந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். விவசாயி பிரபாத் கூறுகையில், குத்தகைக்கு இடங்களை வாங்கிய விவசாயிகள் பலரும், வட்டிக்கு கடன் வாங்கி வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் குலை தள்ளிய நிலையில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.