ஒரு மாதமாக விநியோகம் செய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் ஆவேசம்
ஒரு மாதமாக விநியோகம் செய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் ஆவேசம் | Coimbatore | Customers angered as distribution was not carried out for a month கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை. வினியோகிஸ்தர்களிடம் கேட்டால் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் தாமதமாகத்தான் வரும் என பதில் அளித்துள்ளனர். ஆனால் சிலிண்டர்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று அப்பகுதி வழியாகச் சமையல் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்பகுதி மக்கள், லாரியை சிறைபிடித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆலாந்துறை போலீசார், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலிண்டர் விநியோக நிறுவனத்திடம் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலிண்டர் விநியோகிக்க செய்தனர். இது குறித்து வினியோகஸ்தர் ஒருவர் தெரிவிக்கையில், தட்டுப்பாடுகள் ஏற்படாமல் தடுக்கவும், முன்பதிவு செய்த சிலிண்டரைச் சரியான நேரத்தில் பெறவும், எரிவாயு நிறுவனங்களின் ஆப் அல்லது இணையதளம் மூலம் சிலிண்டர் விநியோக நிலையை கண்காணிக்கலாம். நீண்ட நாட்களாக சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால், உங்கள் கேஸ் ஏஜென்சியின் மேலாளரிடம் எழுத்துப் பூர்வமான புகார் அளிக்கலாம். அதிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில், எண்ணெய் நிறுவனங்களின் கட்டணமில்லா டோல் ப்ரி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். சிலிண்டர் சிறைபிடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் நிலைமையை சீர் செய்தனர்.