'சமூக சேவை ரத்தினம்' என போற்றப்படும் மாற்றுத்திறனாளி சரவணகுமார் | Disabled community service
சமூக சேவை ரத்தினம் என போற்றப்படும் மாற்றுத்திறனாளி சரவணகுமார் | Disabled community service | Udumalpet திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் குருவப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சரவணக்குமார், வயது 41. ரேஷன் கடை பணியாளர். பணி முடிந்தவுடன் மாலை நேரத்தில் ஆட்டோ ஓட்டுவது என அயராத உழைப்புடன் பொது நலப்பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளை தேடிச் சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை நண்பர்களின் உதவியுடன் இலவசமாக வழங்கி வருகிறார். தான் பணியாற்றும் குருவப்பநாயக்கனுார் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதற்கு சிறப்புக்குழு அமைத்துளார். மேலும் வார்டு தோறும் எந்த நாளில் எந்த பொருட்கள் வழங்கப்படும் என்ற விவரத்தையும் பதிவிடுகிறார். இதனால் ரேஷன் கடைக்கு வருவோர் பொருட்கள் வாங்க காத்திருக்க வேண்டியதில்லை. தேவையான பொருட்களை உடனுக்குடன் சப்ளை செய்கிறார். மேலும் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்காமல் நுகர்வோருக்கு வழங்குவதால் பொருட்கள் ஸ்டாக் இல்லை என்ற பேச்சுக்கே சரவணக்குமாரிடம் இடமில்லை இப்பணிகளுடன் நின்று விடாமல் ரத்ததானம், உடல் உறுப்பு தானம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள், கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சரவணக்குமார் கூறுகையில், என்னுடைய நண்பர்கள் தான், இந்த பொதுநலப்பணியில் ஈடுபடுவதற்கான முக்கிய காரணம். கண்தானம், ரத்த தானம் செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநில மற்றும் அகில இந்திய அளவில் கொண்டு செல்வேன் என உறுதிபடக் கூறினார்.