மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நகராட்சி ஆபீஸ் முற்றுகை | Stoppage of drinking water supply | Nellialam
மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நகராட்சி ஆபீஸ் முற்றுகை | Stoppage of drinking water supply | Nellialam Municipality நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாலம் நகராட்சியின் 16வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது கைதுக்கொல்லி கிராமம். இங்கு அரசு பழங்குடியினர் பள்ளி அருகே 20 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இங்கு கடந்த எட்டு மாதமாக குடிநீர் சப்ளை இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தினர். இதையடுத்து நகராட்சி மூலம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய்கள் பொருத்தி குடிநீர் சப்ளை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பணி கிடப்பில் போடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் தேர்தலுக்கு முன்பாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் ஒரு சில நாட்கள் மட்டுமே லாரியில் குடிநீர் விநியோகம் செய்தனர். தேர்தல் முடிந்ததும் குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் வந்து நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கவுன்சிலர் செல்வராணி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்டமாக ரப்பர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதுடன் லாரி மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். தனிநபர் குடிநீர் இணைப்பு பெற விரும்பும் நபர்கள் விண்ணப்பம் கொடுத்தால் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.