தமிழகத்தில் ஆம்னி பஸ் ஓட்டும் முதல் முதுகலை பட்டதாரி ஆசிரியை கனிமொழி
தமிழகத்தில் ஆம்னி பஸ் ஓட்டும் முதல் முதுகலை பட்டதாரி ஆசிரியை கனிமொழி | First PG teacher to drive omni bus | udumalai திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணர் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி. எம்.ஏ., பி.எட்., பயின்று, தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். பஸ் ஓட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டு தமிழகத்தில் முதல் ஆம்னி பஸ் டிரைவராக மாறியுள்ளார். பொள்ளாச்சி முதல் சென்னை வரை தனது சொந்த ஆம்னி பஸ்சை ஓட்டி பீடு நடை போட்டு வருகிறார். பள்ளி படிப்பு முதலே சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்று வந்தார் கனிமொழி. அவரது குணம், திறமையை பி.இ., இன்ஜினீயரிங் கணவரான கதிர்வேல் ஊக்கப்படுத்தினார். திருமணமான துவக்கத்தில் கணவரின் சொந்த தொழிலை கனிமொழி கனிவோடு கவனித்து கொண்டார். கணவருடன் சேர்ந்து கார் ஓட்டக் கற்றுக் கொண்ட கனிமொழிக்கு பஸ் ஓட்ட வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் அதிகரித்த நிலையில் கணவருக்கு சொந்தமாக ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஹெவி டிரைவிங் லைசென்ஸ் பெற்று இரண்டு ஆம்னி பஸ்களை வாங்கினர். ஜனவரி முதல் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் அவ்வப்போது ஆம்னி பஸ்சை கனிமொழி ஓட்டி வந்தார். கடந்த 15 நாட்களாக முழு நேர ஆம்னி பஸ் டிரைவராக கனிமொழி தொழிலில் படு பிஸியானார். ஆம்னி பஸ் தம்பதிக்கு 8 மற்றும் 4 வயதில் குழந்தைகள் உள்ளனர். அவர்களை மிஸ் பண்ணுகிறோம் என்ற எண்ணம் அவ்வப்போது ஏற்பட்டாலும் சாதிக்க வேண்டும் உத்வேகம் மேலோங்கி விடுகிறது. கணவர், பெற்றோர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் உற்சாகம் அளித்து வருவதால் எந்த துறையிலும் ஆண், பெண் பேதம் இல்லை. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கலாம் என்ற எண்ணம் கனிமொழியை தமிழகத்தின் முதல் ஆம்னி பஸ் டிரைவராக உயர்த்தியது. தன்னம்பிக்கை நட்சத்திரம் கனிமொழி, பெண் சமுதாய முன்னேற்றத்தை ஊக்கப்படுத்தி உழைத்து வரும் கதிர்வேலின் முயற்சி போற்றுதலுக்குரியது.