கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பண்டாரத்துருத்து என்ற இடத்தில் உள்ள மூக்கூம்புழா தேவி
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பண்டாரத்துருத்து என்ற இடத்தில் உள்ள மூக்கூம்புழா தேவி கோயில் | Goddess of Healing Devi Temple | Kerala பரசுராமன் பிரதிஷ்டை செய்த பாரதத்தில் உள்ள 108 திவ்ய தேவி கோயில்களில் மூன்று கேரளாவில் உள்ளது. அவற்றில் ஒன்று கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பண்டாரத்துருத்து என்ற இடத்தில் உள்ள மூக்கூம்புழா தேவி கோயில். இது தேவி கோயில் என்று அறியப்பட்டாலும், இங்கு அருள்பாலிக்கும் அம்மன் கொடுங்காளி, பத்ரகாளி என்று வணங்கப்பட்டாலும் மூல விக்ரஹம் சிவலிங்கம் தான். ‛அஷ்டகோண லிங்கம் எனப்படும் எட்டு முகங்கள் கொண்ட அபூர்வ சிவலிங்கத்தில் குடிகொண்டு, சிவபெருமானின் மகளாக அவரது தொடையில் இருந்து அம்மன் அருள்புரிகிறார் என்பது நம்பிக்கை. மனிதனின் மூக்கு அளவு வரை தண்ணீர் மூழ்கி இருந்ததால் மூக்கூம்புழா என்று இந்த இடத்திற்கு பெயர் வந்தது. அப்படி தண்ணீர் சூழ்ந்திருந்த இடத்தில் தான் பன்னிரெண்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது இந்த கோயில். கடலுக்கு மிகஅருகில் இருந்தும் 2004 ல் சுனாமியால் இக்கோயிலுக்கும் இக்கிராமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதில் இருந்தே காளியின் கருணையை அறியலாம் என்கின்றனர் இந்த ஊர்மக்கள். மதுரையை எரித்த பிறகு ஆலப்பாடு என்ற இந்த பிரதேசத்திற்கு கண்ணகி வந்து தங்கியிருந்ததாகவும், பின்னர் கொடுங்கல்லுார் நோக்கி புறப்பட்டதாகவும், அவரோடு வந்தவர்கள் வழிவழியாய் இங்கு வாழ்ந்து வருவதாகவும் ஒரு கருத்து உண்டு. அவர்களே கோயில் கட்டியதாகவும் கருதப்படுகிறது. இக்கோயிலில் கண்ணகி-கோவலன் கதையை பாடலாக கூறும் ‛தோற்றம்பாட்டு பாடப்படுவதே இதற்கு சான்று.