நாட்டு மாடுகள் விற்பனை கண்காட்சி நிறைவு
நாட்டு மாடுகள் விற்பனை கண்காட்சி நிறைவு/ Isha yoga Tamil Thembu Festival Rekla race / covai கோவை ஈஷா மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா பிப்ரவரி 27ம் தேதி துவங்கியது. திருவிழாவில் தமிழ் பண்பாட்டு கலை பயிற்சி பட்டறைகள், பாரம்பரிய உணவு மற்றும் புவிசார் குறியீடு பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. தினமும் மாலை ஆதியோகி முன்பு தமிழ் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மார்ச் 7ம் தேதி முதல் நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகள் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. காங்கேயம், தார்ப்பார்க்கர், கிர், சாஹிவால் உள்ளிட்ட நாட்டின மாடுகளும் மார்வாரி நாட்டின குதிரைகளும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. திருவிழாவில் இன்று ரேக்ளா பந்தயம் நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் சீறிப்பாய்ந்தன. போட்டிகள் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பிரிவில் தனித்தனியாக நடத்தப்பட்டது. முதல் பரிசு 1 லட்சம், இரண்டாம் பரிசு 50,000, மூன்றாம் பரிசு 20,000 மற்றும் நான்காம் பரிசு 14,000 ரூபாய் வழங்கப்பட்டது. 5 முதல் 15 இடங்களை வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தலா 3,000 மற்றும் 16 முதல் 30 இடங்களை வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. பந்தயத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மெடல் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி பரிசுகள் வழங்கினார். தமிழ் தெம்பு திருவிழா பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஈஷா யோகா மைய தன்னார்வலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.