உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் கேள்விக்குறியாகும் மெட்ரோ ரயில் திட்டம் | What is the metro rail project?

கோவையில் கேள்விக்குறியாகும் மெட்ரோ ரயில் திட்டம் | What is the metro rail project?

கோவையில் வராத மெட்ரோ ரயில் திட்டத்திற்காக விரைவில் நிறைவேற்ற முடிந்த பல திட்டங்களும் கைவிடப்படுவது தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கோவை நகரம் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் 2011ல் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான வரிவான திட்ட அறிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் தான் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது மொத்தம் 9 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டிருந்த ஜெர்மன் வங்கி கைவிரித்த பின் புதிய வங்கி எதுவும் கிடைக்கவில்லை. இந்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி இதற்கான கோப்பு அனுப்பப்பட்டு பிப்ரவரி 19ம் தேதி மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையால் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலையும், நிதியையும் தமிழக அரசு எதிர்பார்த்துள்ளது. எனினும் ஒப்புதலும், மத்திய அரசின் பங்களிப்பு நிதியும் உடனடியாக கிடைத்தாலும் நிதியுதவி வழங்குவதற்கான உரிய வங்கி கிடைக்காவிட்டால் இத்திட்டம் துவக்கப்பட வாய்ப்பில்லை. இதனால் கோவை மெட்ரோ ரயில் திட்டம் இப்போதைக்கு வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. ஆனால் வராத மெட்ரோ ரயில் திட்டத்தை காரணம் காட்டி பல்வேறு திட்டங்களையும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கைவிட்டு வருவது மட்டும் தொடர்ந்து நடக்கிறது. தமிழக அரசின் திட்டப்படி முதற்கட்டமாக சத்தி ஈரோடு மற்றும் அவிநாசி ரோட்டில் மெட்ரோ ரயில் தடம் அமைப்பதை சுட்டிக்காட்டி சரவணம்பட்டி பகுதியில் பாலம் கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி டெண்டர் விடும் சூழலில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சத்தி ரோட்டில் கணபதியில் இருந்து சரவணம்பட்டி வரை ரோடு விரிவாக்க நிலமெடுக்கப்புக்கு நகர ஊரமைப்புத்துறை நிதி ஒதுக்கியும் அதுவும் துவங்கப்படவில்லை. மெட்ரோ தடத்துக்காக கூடுதல் நிலமெடுக்க பிரேரணை தயாரிப்பதாக காரணம் காட்டப்பட்டுள்ளது. காந்திபுரம் மேம்பாலத்தில் இறங்கு தளம் அமைக்கும் திட்டமும், மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் வருவதை சுட்டிக்காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் சந்திப்பில் மத்திய அரசின் நிதியில் பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் விடுவதும் இதே திட்டத்திற்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தடாகம் ரோடு, லாலி ரோடு சந்திப்பில் பாலம் கட்டுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படியாக கோவையில் வராத மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வரிசையாக பல்வேறு பொன்னான திட்டங்களும் கைவிடப்பட்டு வரப்படுவதாக அல்லது தள்ளிப்போடப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர். இனியாவது கோவை மெட்ரோ வழித்தடங்களை தமிழக அரசு தெளிவுபடுத்துவது அவசியம். இல்லாவிடில் மத்திய அரசு திட்டங்களை கைவிடுவதில் கில்லாடிகளான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்னும் பல திட்டங்களை கைகழுவுவது உறுதி.

மார் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை