மேட்டுப்பாளையம் பகுதி கிராமங்களை மிதக்க விட்டவெள்ளம் |Mettupalayam|Heavy Rain |Bhavani River | PWD
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பில்லுார் அணை. இதன் நீர்மட்டம் 100 அடி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் குறுக்கே வெள்ளிப்பாளையம் என்ற இடத்தில் நீர் மின் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஷட்டர் பழுதானதால் அதனை திறக்க முடியவில்லை. தொடர்ந்து உபரிநீர் ஆற்றின் கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் புகுந்து தெப்பம் போல் தேங்கியது. இதனால் ரங்க ராயன் ஓடை, சுப்பிரமணியர் கோயில், சந்தக்கடை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. திடீரென அதிகாலையில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் செய்வதறியாது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். வருவாய்த்துறையினர் வந்து பார்த்து மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். நீர் புகுந்த பகுதிகளையும், ஓபன் ஆகாத ஷட்டரையும் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ செல்வராஜ் பார்வையிட்டார். நேரில் சென்று ஆய்வு செய்தார். வருவாய்த்துறையினர், மின்வாரியத்தினர் இணைந்து வெகுநேரம் போராடி ஷட்டரை சிறிது திறந்தனர். நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி இதுபோன்ற பிரச்னையை சந்திப்பதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனவும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.