நொய்யல் நதியை காப்பாற்றக்கோரி கதறும் விவசாயிகள் | Save Noyyal River | Farmers Plea
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் துவங்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், சாமளாபுரம், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் மற்றும் கரூர் வரை 180 கிலோ மீட்டர் பயணிக்கும் நொய்யல் நதி இறுதியில் காவிரி ஆற்றுடன் இணைகிறது. இதன் வழித்தடத்தில் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் 40க்கும் அதிகமான குளம், குட்டைகள் உள்ளன. கடுமையாக மாசடைந்துள்ள நொய்யல் நதியை மீட்பதற்கான முயற்சியில் நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஈடுபட்டு வருகிறது. முந்தைய காலத்தில் அகண்ட காவிரி போல் காணப்பட்ட நொய்யல் நதியை அரசர்களும், முன்னோர்களும் புண்ணிய நதியாக வழிபட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. நதியின் இரு கரைகளிலும் ஏறத்தாழ ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு செழிப்படைந்து காணப்பட்டது. இப்படிப்பட்ட நொய்யல் நதியில் உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டி அசுர வேகத்தில் அழித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் நொய்யலில் நேரடியாக திருப்பி விடப்படுவதால் தார் காலவையை கலந்தது போல் கருப்பாக ஓடுகிறது. நதிநீர் நுங்கு நுரையுடன் பழுப்பு நிறத்துடன் ஓடுகிறது. நொய்யல் மாசு காரணமாக நதியை ஒட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கால்நடைகளின் குடிநீர் ஆதாராம் மாசடைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பாதிப்புகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் நொய்யலை காப்பதில் எள்ளளவும் கவலை கொள்வதில்லை. ஆடு மாடுகள் கூட நொய்யல் நீரை குடிப்பதில்லை. ஐந்தறிவு ஜீவனுக்கு கூட இந்த நீரின் பாதிப்பு தெரிந்துள்ளது. நொய்யல் நீரை குடிக்கும் கால்நடைகள் மட்டுமன்றி, இவற்றின் பாலை பயன்படுத்தும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்படும் அபாய கட்டத்தில் உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து நொய்யல் நதி மாசடைவதில் இருந்து மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொய்யல் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.