கோவையில் கனமழை; நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
கோவையில் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், மாலை, 4:00 மணி முதல், பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஆங்காங்கே மழை நீர் குளம் போல் தேங்கி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் நோயாளியை ஏற்றிக்கொண்டு அவசர அவசரமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று வழி இன்றி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னே இருந்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுவதற்காக எவ்வளவோ முயன்றும் போதிய இடம் கிடைக்காததால் ஆம்புலன்ஸ் மெல்ல நகர்ந்து சென்றது. தொடர்ந்து பெய்த மழையால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.