₹.16 லட்சம் மதிப்பில் பணி துவங்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் 'விடியவில்லை' | Road Damage
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அமைந்துள்ளது பந்தபிலா, தைதல்கடவு மற்றும் குன்றில்கடவு உள்ளிட்ட பகுதிகள். தைதல்கடவு முதல் குன்றில்கடவு வரை 800 மீட்டர் சாலை மண் சாலையாக உள்ளது. இதை சீரமைக்க கூடலூர் ஊராட்சி ஒன்றியம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அப்போதே சாலையின் ஒரு சில இடங்களில் மட்டும் ஜல்லிக்கற்களை பரப்பினர். சாலை நுழைவாயில் பகுதியில் இரண்டு லோடு ஜல்லிகற்களை கொட்டி விட்டு சென்றனர். ஆனால் பணி துவங்கி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. ஜல்லிக்கற்கள் பரப்பி, சாலை நுழைவாயில் பகுதியின் நடுவே ஜல்லிக்கற்கள் கொட்டி பாதையை அடைத்து விட்டனர். இதனால் கிராமத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு கிலோ மீட்டர் துாரம் கரடு, முரடான பாதையில் நடக்க வைத்து அழைத்து செல்கின்றனர். கிராம நுழைவாயில் அருகே அம்மன்காவு செல்லும் சாலையில் நிற்கும் பள்ளி பஸ் மற்றும் ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு அனுப்புகின்றனர். முதியோர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி வர வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. சாலை சீரமைக்க நிதி ஒதுக்கி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் பெயரளவிற்கு சாலையில் ஜல்லிகற்களை கொட்டி சென்றது குறித்து அதிகாரிககளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டுகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதியில் சிறுத்தை மற்றும் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவசர தேவைகளுக்கு வெளியே வர முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராம மக்கள் வாழ்வாதாரம் கருதி தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.