ஐயப்பன் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் பக்தனின் அன்பு கடிதம் |Sabarimala post office open |sabarimala
நம் அன்புக்குரியவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் காற்றோடு கரையும் கற்பூரமாகி வருகிறது. ஸ்டாம்ப் கலெக்சன், முத்திரை கலெக்சன் எல்லாம் நாம் மறந்து போன ஹாபி. இன்ஸ்ட்டாகிராம் போஸ்டிற்கு லைக் போட்டு ஓடும் நமக்கு போஸ்ட் ஆபீஸ் செல்ல நேரம் ஏது. ஆனால் சுவாமி ஐயப்பனை நேரில் சென்று தரிசிக்க முடியாத பக்தர்கள் ஐயப்பன் சன்னிதானத்திற்கு கடிதம் எழுதி அனுப்பும் பழக்கம் இன்றளவும் தொடர்கிறது. இதற்காகவே பிரத்தியேகமாக சுவாமி ஐயப்பன் சன்னிதானம் பெயரில் போஸ்ட் ஆபீஸ் ஒன்று இயங்குகிறது. 1963ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த போஸ்ட் ஆஃபீஸிற்கு 1974 ல் ஸ்பெஷல் உலோக அஞ்சல் முத்திரை வழங்கப்பட்டது. தற்போது சபரிமலை மாளிகைப்புரம் கோயில் அருகே இந்த போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. ஆண்டு தோறும் நவம்பர் 14 முதல் ஜனவரி 20 வரை மட்டுமே இந்த போஸ்ட் ஆஃபீஸ் திறந்திருக்கும். தற்போது மண்டல மற்றும் மகர விளக்கு சீசனையொட்டி கோயில் நடை திறந்துள்ளதால் போஸ்ட் ஆஃபீஸ் களை கட்டியுள்ளது. இந்த போஸ்ட் ஆஃபீஸின் உலோக முத்திரை 18 படியுடன் ஐயப்பன் அருள்பாலிக்கும் சிறப்பு வடிவம் பொறிக்கப்பட்டதாகும் . இந்த போஸ்ட் ஆபீஸில் நான்கு பேர் பணியில் உள்ளனர். இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து திருவிழா முடிந்ததும் வீடு திரும்புவர். சன்னிதான போஸ்ட் ஆபீஸிற்கு தினமும் மணியாடர்கள், இன்லாண்டு லெட்டர், தபால் அட்டை என 200க்கும் மேற்பட்ட கடிதங்கள் வருகிறது. பக்தர்கள் தங்களது குழந்தைகள் பெயர் சூட்டு விழா, புதுமனை புகுவிழா, திருமணம் உள்ளிட்டவைகளுக்கு ஐயப்பனுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில பக்தர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து ஐயப்ப சாமிக்கு உரிமையுடன் கடிதம் எழுதி அனுப்புவர். இந்த கடிதங்கள் ஐயப்பனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும். இரண்டு மாதங்களுக்கு பிறகு போஸ்ட் ஆபீஸ் மூடப்படும்போது உலோக அஞ்சல் முத்திரை பந்தனம்திட்டா போஸ்ட் ஆபீஸ் லாக்கரில் வைக்கப்படும். ஜனவரி இருபதாம் தேதிக்கு பின்னர் பட்டுவாடா செய்யப்படும் கடிதங்கள் பந்தனம்திட்டா போஸ்ட் ஆபீஸிற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து கடிதங்கள் சன்னிதான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அக்கடிதங்கள் ஐயப்பன் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும். ஐயனுக்கு அன்பு மடல் அனுப்ப வேண்டிய முகவரி ஸ்ரீஐயப்ப சுவாமி, சுவாமி ஐயப்பன் சன்னிதானம், சபரிமலை - 689713