சிலம்பம் போட்டியில் கல்லுாரி மாணவர்கள் அசத்தல் | Silambam competition | Kovai
கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழக முதல்வர் கோப்பைக்கான சிலம்பம், செஸ் மற்றும் கேரம் போட்டிகள் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் இரு நாட்கள் நடக்கிறது. சிலம்பம் போட்டியில் பங்கேற்க 700 மாணவ, மாணவிகள் இணையதளத்தில் பதிவு செய்தனர். மாணவர்களுக்கான தொடு முறை போட்டியில் 45-55 கிலோ, 55-65, 65-75 மற்றும் 75 கிலோவுக்கு மேல் என நான்கு பிரிவுகளில் சிலம்பம் நடக்கிறது. மாணவியர் பிரிவில் 42-52 கிலோ, 52-62, 62-72 மற்றும் 72 கிலோவுக்கும் அதிகமான என நான்கு பிரிவுகளில் சிலம்பம் நடக்கிறது. இதில் மாணவர்களுக்கான 75 கிலோவுக்கும் அதிகமான பிரிவில் இந்துஸ்தான் கல்லுாரி மாணவர் குலாம் அகமது முதலிடம் பிடித்தார். சி.ஐ.டி. கல்லுாரி மாணவர் சிவனேஸ் இரண்டாம் இடமும், கோவை அரசு கலைக் கல்லுாரி மாணவர் பரணிதரன் மூன்றாம் இடமும் பிடித்து கல்லுாரிக்கு பெருமை சேர்த்தனர். அதேபோல் மாணவியருக்கான 72 கிலோவுக்கும் அதிகமான பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி மோதிகா முதலிடம் பெற்றார். குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி மாணவி நித்யாஸ்ரீ இரண்டாம் இடமும், கற்பகம் கல்லுாரி மாணவி விஸ்வஸ்ரீ மூன்றாம் இடமும் பிடித்து கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்த்தனர். இரு பாலரும் கம்பானது உடலில் படாது தடுப்பு முறையை கையாண்டு வெற்றிக்கு போராடினர்.