உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச போதைப் பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த பெண் உட்பட மூவர் கைது

சர்வதேச போதைப் பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த பெண் உட்பட மூவர் கைது

சர்வதேச போதைப் பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த பெண் உட்பட மூவர் கைது | Smuggling of Narcotics | Worth Several Crores in a Car | Palakkad கேரள மாநிலம் பாலக்காடு டவுன் வடக்கு போலீசார் நேற்றிரவு பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தனர். அதில் 1.112 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதில் கார் பயணி காசர்கோடு மாவட்டம் பனத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்ரோனியோ சீயஸ், வயது 23, என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு நிதியுதவி வழங்குபவர் என தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் இருந்து கேரளாவுக்குள் நுழைந்த போதைப்பொருள் கடத்தல் காரை போலீசார் தீவிரமாகக் கண்காணித்தனர். போலீசாரின் கண்காணிப்பை உணர்ந்த கடத்தல் கும்பல், வேலந்தாவளம் மற்றும் சித்தூர் வழியாகத் தப்ப முயன்றது. எனினும் நள்ளிரவு 2 மணியளவில் பாலக்காடு சந்திப்பு அருகே வைத்து எஸ்.ஐ., பிரமோதின் தலைமையிலான போலீஸ் படையினர் சினிமா பாணியில் ஸ்பீடாகச் சென்று வாகனத்தைக் குறுக்கே நிறுத்தி காரை சுற்றி வளைத்தனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனையில் காரின் டீசல் டேங்க் அருகே ரகசிய அறை அமைத்துப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ எம்.டி.எம்.ஏ (MDMA), கொகைன், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி (LSD) ஸ்டாம்புகள் மற்றும் ஹைப்ரிட் கஞ்சா என பல கோடி ரூபாய் விலை மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றினர். விசாரணையில் கார் பயணிகள் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளி பகுதியை சேர்ந்த முகமது நிஷி வயது 26, மலப்புரம் மாவட்டம் வேங்கரை பகுதியை சேர்ந்த முகமது அசுருதீன் வயது 30 மற்றும் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவைச் சேர்ந்த பாத்திமா வயது 27, என தெரியவந்தது. இவர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியக் கூட்டாளிகள் என்பதும், ஓணம் பண்டிகையைக் குறிவைத்து போதைப் பொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இன்னோவா கார் பறிமுதல் செய்யப்பட்டது. பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றினர். மேலும் இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆக 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !