இமாச்சல் பிரதேச அணியை திணறடித்த தமிழக அணி வீரர்கள் | sports | covai
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கான தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டம் சார்பில் 20வது தேசிய பி.எஸ்.என்.எல். விளையாட்டு போட்டிகள் கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியை தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட தலைமைப் பொது மேலாளர் பனாவத்து வெங்கடேஷ்வரலு துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சர்வதேச டென்னிஸ் விளையாட்டு வீரர் ரமேஷ், கேரள முன்னாள் கூடைப்பந்து மாநில விளையாட்டு வீரர் முரளி பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தினர். முதல் சுற்று கூடைப்பந்து லீக் போட்டிகள் பார்வையாளர்களிடம் கரகோஷங்களை எழுப்ப வைத்தது. கூடைப்பந்து போட்டியில் தமிழகம் மற்றும் இமாச்சலபிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டி விருவிருப்பாக அமைந்தது. தமிழ்நாடு அணி வீரர்கள் துவக்கம் முதலே புள்ளிகளை குவித்து எதிரணியினரை திணறடித்தனர். இதில் 76-49 என்ற புள்ளிக் கணக்கில் இமாச்சலப் பிரதேச அணியை தோற்கடித்தனர். அதேபோல் கேரள அணி மகாராஷ்டிர அணியை 58-18 என்ற புள்ளிக்கணக்கிலும், மேற்குவங்க அணி சத்தீஸ்கர் அணியை, 60-43 என்ற புள்ளி கணக்கிலும் வீழ்த்தியது. கைப்பந்து லீக் போட்டிகளில் தமிழக அணி, உத்தரகாண்ட் அணியை 2-0 என்ற செட் கணக்கிலும், கர்நாடக அணி பீகார் அணியை 2-0 என்ற செட் கணக்கிலும் இமாச்சலப் பிரதேச அணி உத்திரபிரதேச மேற்கு அணியை 2-0 என்ற செட் கணக்கிலும், ராஜஸ்தான் அணி, அசாம் அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும் வென்று அசத்தின. டென்னிஸ் போட்டிகளில் உத்தரகாண்ட் அணி, உத்திரபிரேதச மேற்கு அணியையும், பஞ்சாப் அணி உத்திரபிரதேச கிழக்கு அணியையும் வென்றன.