பல்வேறு எடை பிரிவுகளில் நடந்த விறுவிறுப்பான போட்டி | sports | Kovai
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டி நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவர் ரங்கசாமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஆகியோர் துவக்கி வைத்தனர். பள்ளி மாணவர் பிரிவில் 359 பேர், மாணவியர் பிரிவில் 37 பேர் பங்கேற்றனர். மாணவியர் 60 முதல் 70 கிலோ எடை பிரிவில் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மஞ்சுளா தேவி முதலிடம் பெற்றார். உடுமலை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பள்ளி பூமிகா இரண்டாமிடம் மற்றும் திருப்பூர் வித்யாமந்திர் பள்ளி மந்திரா மூன்றாமிடம் பெற்றனர். 70 கிலோ எடை பிரிவில் வீரபாண்டி பாரதி மெட்ரிக் ஸ்ரீ வர்ஷினி முதலிடம் பெற்றார். விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ரீனா காஜிரா இரண்டாமிடம் மற்றும் ஜெய்வாபாய் பள்ளி சுஜிதா மூன்றாமிடம் பெற்றனர். ஆண்களுக்கான பொதுப்பிரிவு சிலம்பம் போட்டியில் 107 பேர் மற்றும் பெண்கள் பிரிவில் 34 பேர் பங்கேற்றனர். பொது ஆண்கள் பிரிவில் 40 முதல் 55 கிலோ எடை பிரிவில் மடத்துக்குளம் மகாந்த் முதலிடம் பெற்றார். திருப்பூர் ஆதர்ஷ் இரண்டாமிடம் மற்றும் உடுமலை சந்தான பாரதி மூன்றாமிடம் பெற்றனர். 55 முதல் 70 கிலோ எடை பிரிவு திருப்பூர் பாலாஜி முதலிடம் பெற்றார். பல்லடம் ஹரிதரன் இரண்டாமிடம் மற்றும் கருவலுார் கோகுலகிருஷ்ணன் மூன்றாமிடம் பெற்றார்.