கோவையில் ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி | sports | Kovai
கோவை பீளமேடு நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் 45வது கோயம்புத்துார் சகோதயா ஹேண்ட்பால் போட்டிகள் இன்று துவங்கியது. ஆண்களுக்கான இப்போட்டியில் 26 பள்ளிகளை சேர்ந்த 50 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை நேஷனல் மாடல் பள்ளிகளின் குழும தாளாளர் மோகன் சந்தர் துவக்கி வைத்தார். 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஏர் ஃபோர்ஸ் பள்ளி மற்றும் பாரதிய வித்யா பவன் பள்ளியும் முதல் போட்டியில் மோதியது. பரபப்பான ஆட்டத்தில் 8-5 என்ற புள்ளி கணக்கில் ஏர் ஃபோர்ஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது. இரண்டாம் ஆட்டத்தில் நேஷனல் மாடல் பள்ளி அணியும், மான்செஸ்டர் பள்ளி அணியும் மோதியது. துவக்கம் முதலே துடிப்புடன் விளையாடிய நேஷனல் மாடல் பள்ளி வீரர்கள் 10-4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர். அதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு முதல் போட்டியில் வேல் சர்வதேச பள்ளி அணியும், பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி அணியும் மோதியது. இதில் 13-11 என்ற புள்ளி கணக்கில் வேல் சர்வதேச பள்ளி அணி வெற்றி பெற்றது. இரண்டாம் ஆட்டத்தில் ஏ.ஆர்.வி., பள்ளி அணி 11-10 என்ற புள்ளி கணக்கில் வித்ய விகாஷ் பள்ளி அணியை வென்றது.