நம்பி வந்த காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு மரண தண்டனை
நம்பி வந்த காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு மரண தண்டனை | Kanyakumari | The Zees Challenge is a case of murder கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ். 2022ல் திங்கள்சந்தை அருகே நெய்யூரில் தனியார் கல்லுாரியில் ரேடியாலஜி இறுதியாண்டு படித்து வந்தார். கல்லுாரிக்கு பஸ்சில் வந்து சென்ற போது களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கு கிரீஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிப்ரவரியில் ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் கிரீஷ்மா தன் காதலன் ஷாரோனுடன் தொடர்பை குறைத்தார். ஆனால், ஷாரோன் தொடர்ந்து அவருடன் பேச முயற்சித்தார். இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஷாரோனிடம் இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். குளிர்பானத்தில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்தார். அதில் ஷாரோனுக்கு உடல்நலம் குன்றியது. பின்னர் வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார். வாந்தி எடுத்த ஷரோன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். விசாரணையில் உண்மை தெரிந்ததும் பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கிரீஷ்மாவுடன் சேர்த்து அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமரன் நாயர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நெய்யாற்றின் கரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா, அவரது தாய் மாமன் நிர்மல்குமார் நாயரை குற்றவாளிகளாக கோர்ட் அறிவித்தது. கிரீஷ்மாவின் தாயார் சிந்து விடுதலை செய்யப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விபரத்தை கோர்ட் இன்று அறிவித்துள்ளது. அதன்படி காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மாமன் நிர்மல்குமார் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.